பள்ளிகளில் 90 நிமிட விளையாட்டு? அரசிடம் கருத்து கேட்கும் நீதிமன்றம்
பள்ளிகளில் 90 நிமிட விளையாட்டு? அரசிடம் கருத்து கேட்கும் நீதிமன்றம்
பள்ளி வேலை நாட்களில், மாணவர்களை 90 நிமிடம் விளையாட்டில் ஈடுபடுத்தக்கோரும் மனு
தொடர்பாக, மத்திய, மாநில அரசுகள் கருத்து தெரிவிக்க வேண்டும்' என, உச்ச
நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
'விளையாட்டை அனைத்து பள்ளி மற்றும் கல்லுாரிகளில் கட்டாய பாடமாக்க உத்தரவிட
வேண்டும்' என, விளையாட்டுத்துறை ஆய்வாளர் கனிஷ்கா பாண்டே, உச்ச நீதிமன்றத்தில்
பொதுநல மனு தாக்கல் செய்தார்.
இதற்கான ஆலோசனை வழங்கும் பொறுப்பு, மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணனிடம்
ஒப்படைக்கப்பட்டது.அவரது அறிக்கையில், 'பள்ளிகளில், உடற்கல்வியை அடிப்படை
உரிமையாக்க வேண்டும். பள்ளி வேலை நாட்களில் 90 நிமிடங்களை விளையாட்டுக்கு ஒதுக்க
வேண்டும்' என, கூறப்பட்டு உள்ளது.
இந்நிலையில், இந்த மனுவை நேற்று முன்தினம் விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த
உத்தரவு:மாணவர்களை விளையாட்டில் ஈடுபடுத்துவது, மிக பயனுள்ளதாக இருக்கும்.
இல்லாவிடில், அவர்கள் முழு நேரத்தையும் புத்தகங்களில் செலவிடுவார்கள். பிளஸ் 2
வரை விளையாட்டில் தீவிரமாக இருக்கும் பலர், பின் அதை மறந்துவிடுகிறார்கள்.
ஏனெனில், விளையாட்டை ஒரு தொழில் விருப்பமாக அவர்கள் பார்க்கவில்லை. எனவே,
விளையாட்டை அடிப்படை உரிமையாக்குவது தொடர்பாக, மத்திய, மாநில அரசுகள், தங்கள்
கருத்தை தெரிவிக்க செய்ய வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
No comments